பாவை பொறியியல் கல்லூரி (PCE) மற்றும் பாவை தமிழ் மன்றம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கீழடி கல்விச் சுற்றுலாவிற்கு, 31- 10- 2026, சனிக்கிழமை அன்று அதிகாலை, 4.30 மணிக்கு, 4- பேருந்துகளில், 209- மாணவர்களுடன், பேருந்துக்கு 3- பேர் வீதம் 12- உதவிப் பேராசிரியர்களும் பயணப்பட்டோம்.
முதலில் திருப்பரங்குன்றத்தை அடைந்தோம். அனைவரும் தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை தரிசித்தப் பின் கீழடி நோக்கி பயணப் பட்டோம். முதலாவதாக கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்திற்கு சென்றோம். அங்கே மாணவர்கள், அகழாய்வு செய்த இடங்களை ஆர்வத்துடன் பார்த்தனர். அவர்களுக்கு எழுந்த சந்தேகங்களுக்கு தமிழ்ப் பேராசிரியர்கள் விளக்கமளித்தோம். வைகைக் கரை நாகரிகம், தமிழி எழுத்துக்கள், 11- கட்ட அகழாய்வுகள், உறை கிணறு போன்றவற்றை விளக்கி கூறினோம். இது மாணவர்களிடயே தமிழ் மொழி மற்றும் தமிழரின் தொன்மை குறித்த வரலாற்று விழிப்புணர்வை ஏற்படுத்தியது. பின்னர் அங்கே பல்வேறு இடங்களில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.
அடுத்ததாக கீழடி(கொந்தகை) அருங்காட்சியகத்திற்கு சென்றடை ந்தோம். அங்கே முதலாவதாக, கீழடி மற்றும் தமிழகத்தில் இதுவரை நடந்த அகழாய்வுகள் குறித்த காணொளியினை திரையரங்கத்தில் ஒளிபரப்பினர். அப்போது ஒரு சில மாணவர்கள், இக்காணொளியை காணும் போது தமிழர்களின் பெருமையைக் கண்டு மயிர்க்கூச்செறிந்ததாகக் கூறி புலகாங்கிதம் அடைந்தனர்.
மேலும், கீழடியின் நீர் மேலாண்மை, உலோகப் பயன்பாடு, சுடுமண் சிற்பம், மட்பாண்டங்களின் பயன்பாடு, வணிகம், நெசவுத் தொழில்நுட்பம் போன்றவற்றை பார்த்து அறிந்து கொண்டனர். இரண்டாம் பருவத்திற்கான பாடத்திட்டத்தில் 80 சதவீதத்தை ஒரே நாளில் பார்த்து அறிந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து கல்லூரியை நோக்கி பயணப்பட்டோம். கல்லூரிக்கு இரவு 10:15 மணிக்கு வந்தடைந்தோம்.
அனைத்து மாணாக்கர் மற்றும் பேராசிரியர்கள் சுற்றுலாவிற்கு முழு ஒத்துழைப்பு நல்கினர். எனவே சுற்றுலாவானது மிகச் சிறப்பாக அமைந்தது. சுற்றுலாவிற்கு வந்திருந்த மாணவர்கள் அனைவரும் சிறப்பான விதத்தில் பின்னூட்டம் அளித்துள்ளனர்.